பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள் – தொல்.திருமாவளவன்

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும் சிதம்பர பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தொல்.திருமாவளவனை கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது,

நடைபெற உள்ள மாநாட்டில் புதிய பாராளுமன்ற கட்டிடம் உள்ளது. மேடை புதிய நாடாளுமன்ற கட்டிடம், வரவேற்பு வளைவு பழைய நாடாளுமன்ற கட்டிடம், இந்த பாராளுமன்ற கட்டிடம் தான் புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அமர்ந்து புதிய இந்தியாவை கட்டமைக்க விவாதித்த இடம்.

ஆகவே அந்த கட்டிடத்தை நாம் மறந்து விட முடியாது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பழைய பாராளுமன்ற கட்டிடம் அதனை வரவேற்பு வளைவாகவும் அதன் பக்கத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை திறந்து வைப்பது போல கட்டமைப்பு உள்ளது. இதில் மூன்று வாயில்கள் கொண்டதாக வளைவை அமைத்துள்ளோம். ஒன்று சுதந்திர வாயில் மெயின் கேட் சமத்துவ வாயில், மூன்றாவது சகோதரத்துவ வாயில் இது அரசியல் அமைப்பு சட்டத்தில் முக்கியமானதாகும்.

சென்னையிலிருந்து சமத்துவ சுடர் தஞ்சையில் இருந்து சகோதரத்துவச்சுடர் வருகிறது. மதுரை மேலவளைவிலிருந்து விடுதலை களத்தில் இருந்து சுதந்திர சுடர் மூன்றும் இன்று மதியம் மாநாடு திடலுக்கு வரவுள்ளது. மாநாட்டு மேடையில் இருந்து அனைத்து தலைவர்களும் ஜனநாயக சுடர்களை ஏந்துகின்றனர்.

இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து விடுவார்கள். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விடுவார்கள், சமூக நீதியை அழித்து எறிந்து விடுவார்கள், தேர்தல் முறையே இல்லாமல் போய் விடும் தேர்தல் பழங்கனவாகிவிடும். ஆகவே, ஜனநாயகத்தை காப்பாற்ற அரசியலமைப்பை காப்பாற்ற சட்டத்தின் விளிம்புகளை காப்பாற்ற இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் வெளியே போய்விடவில்லை. கூட்டணிக்குள் தான் இருக்கிறார்கள். காங்கிரஸ் உடன் பேச்சு வார்த்தையில் சமூக தீர்வு எட்டப்படவில்லை என மம்தா பானர்ஜி கூறி உள்ளார். மறுபடியும் பேச்சு வார்த்தைக்கு இடம் இருக்கிறது. இதேபோல் ஆம்ஆத்மி கட்சி பஞ்சாபில் மட்டும்தான் தனித்து போட்டியிட உள்ளது. இந்தியா கூட்டணி சின்னச் சின்ன முரண்பாடுகள் உள்ளது. இந்தியா கூட்டணி உறுதியாக இருக்கும். இந்த கூட்டணி தேர்தலுக்குப் பின்னர் எவ்வளவு வலிமை மிக்கதாக உள்ளது என்பதை உணர முடியும்.

காங்கிரஸ் விட்டுக் கொடுத்ததன் அடிப்படையில் தான் இந்த கூட்டணி உருவாக்கியுள்ளது. இல்லை என்றால் கூட்டணி உருவாகி இருக்காது. நாங்கள் தேசிய கட்சி என இருந்திருந்தால் இந்த கூட்டணி உருவாகி இருக்காது. காங்கிரஸ் பொறுத்தவரை விட்டுக் கொடுத்து அரவணைத்து செல்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு அது என் சொந்த தொகுதி என தெரிவித்தார். பேட்டியின் போது சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி மேலிட தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறுப்பாளருமான இரா.கிட்டு தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி கவுன்சிலர் பிரபாகரன் உடனிருந்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news