பா.ஜ.க. பெண்களுக்கு எந்த திட்டத்தையும் இதுவரை செயலாக்கம் செய்யவில்லை, வெறும் பேச்சு தான் – சீமான் பேட்டி

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலும், 2026-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலும் நாம் தமிழர் கட்சிக்கானது. நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது. 55 ஆண்டு கால கட்சிகளுடன் எங்களை ஒப்பிடாதீர்கள். எளியவர்கள் ஒருங்கிணைந்து புரட்சியை உருவாக்கி வருகிறோம்.

மகளிர் மசோதாவை செயலாக்கம் என்பது பா.ஜ.க.வின் வெறும் பேச்சு தான். கட்சியில் 33 சதவீத ஒதுக்கீடு உள்ளதா? காதில் தேன் ஊற்றும் வேலை தான் இது. மத்திய அரசும், மாநில அரசும் சரியில்லை. மத்திய அரசை குறை கூறும் மாநில அரசு செய்ய வேண்டியதை கூட செய்யவில்லை. நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து வாங்கி வருகிறார்கள்.

கையெழுத்து வாங்கி முடிவதற்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள். யாரிடம் கொடுப்பது? எல்லாம் நாடகம். தேர்தலுக்கான அரசியல் தான், மக்களுக்கான அரசியல் இல்லை. பிரதமர் வேட்பாளராக தமிழரை பா.ஜ.க. நிறுத்தாது. இந்தியா ஒரு தேசியமா? ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஆனால், தண்ணீர் தர மறுக்கின்றனர். பிறகு எதற்கு ஒரே தேசியம், ஐக்கிய இந்தியா என கூறுங்கள்.

எல்லாவற்றையும் தனியாருக்கு விட்ட பிறகு எதற்கு தேர்தல்? டெண்டர் விட்டு இந்தியாவை கொடுத்து விடுங்கள். இந்த நாட்டில் நம்முடையது என ஏதாவது உள்ளதா? சாலை கூட தனியாரிடம், பிறகு எதற்கு அரசு? ஒன்றிற்கும் இல்லாத அரசுக்கு எதற்கு இவ்வளவு செலவு. வரலாற்றில் யார் பிழை செய்தது.

பா.ஜ.க. பெண்களுக்கு எந்த திட்டத்தையும் இதுவரை செயலாக்கம் செய்யவில்லை, வெறும் பேச்சு தான். வங்கி கணக்கில் ரூ.15 லட்சம், 2 கோடி பேருக்கு வேலை என எதுவும் தரவில்லை. தமிழகத்தில் மட்டும் ஏன் திராவிடராக இருக்க வேண்டும்? வலிமைக்கு ஏற்ப அவர்கள் பலத்தை காண்பித்து வருகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் இதுபோன்ற சோதனைகள் நடைபெற்று வருகிறது. திராவிட கட்சிகளை ஒழிக்காமல் எதிர்கொண்டு விஜய் கட்சி ஆரம்பிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news