Tamilசெய்திகள்

பா.ஜ.க தேர்தல் அறிக்கையை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார்

பா.ஜனதா தேர்தல் அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலாசீத்தாராமன் ஆனந்தா இன் ஓட்டலில் இன்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி தேவைப்படும். அதனால் தான் நிதி மந்திரியை அனுப்பி வைத்துள்ளார்கள். அது உண்மைதான். மறுக்கவும் கூடாது.

தேர்தல் அறிக்கையில் புதுவையில் 51 சதவீதம் பெண்கள் வாக்குறுதியை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம். பெண்களுக்கு வாக்குறுதிகள் சொல்லவே வந்துள்ளேன். பா.ஜனதாவில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும்.

2008-ல் பா.ஜனதாவில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியில் கிராமப்புறத்தில் இருந்து உயர்மட்ட பதவி வரை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அப்போது முதல் தற்போது வரை பெண்களுக்கு மரியாதை தரும் கட்சியாக உள்ளது.

அரசியலில் பெண்களா? என குடும்பத்தில் யோசிப்பர். இடஒதுக்கீடு மூலம் உரிய அங்கீகாரம் கொடுத்து நான் உயர் பதவிக்கு வந்துள்ளேன். பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் கட்சி. தற்போது நிதி மந்திரியாக நான் இங்கு வந்திருக்க முடியாது.

2-வது பெண் நிதி மந்திரி. ஆனால், முதலில் இருந்தவர் யார்? பிரதமராக இருந்தபோது நிதி மந்திரியாகவும், பாதுகாப்பு துறை மந்திரியாகவும் இருந்தார்.

ஆனால், பா.ஜனதாவில் நான் பிரதமராக இல்லை, எனக்கு அந்த பதவிகளை கொடுத்தனர். பெண்களை முன்னேற்ற வேண்டும், வாய்ப்பு தர வேண்டும், ஆதரவு தர வேண்டும் என பா.ஜனதா நினைக்கும் கட்சி. இதனால்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் அளித்த வாக்குறுதிகள்போல இங்கும் அளிக்கப்பட்டுள்ளது. பல மாநிலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அதே போல இந்த வாக்குறுதிகள் புதுவையிலும் நிறைவேற்றப்படும்.

அடித்தட்டு மக்களிடம் பெற்ற கோரிக்கைகள் வாக்குறுதிகளாகி உள்ளது. பிரதமர் மோடிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என பல திட்டங்களை புதுவையில் நிறைவேற்றவில்லை.

மக்களுக்காக இதனை செய்திருக்க வேண்டாமா? உங்கள் நலனுக்காகவா மக்கள் தேர்வு செய்தார்கள். ரே‌ஷன்கடையை மூடினால் என்ன மாதிரி ஆட்சி? மீனவர்கள், ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தை மோடி செயல்படுத்தினார். ஆனால், இதனை நிறைவேற்றவில்லை. புதுவையில் சுற்றுலா, கல்வி, மருத்துவமனைக்காக அதிகமானவர்கள் வந்து சென்றனர்.

ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. பிரதமர் மோடி சிறந்த மாநிலமாக புதுவையை மாற்றுவோம் என வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதுதான் தேர்தல் அறிக்கை.

மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைத்தது பிரதமர். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ராகுலிடம் மொழிமாற்றம் செய்தது போல மக்கள் குறைகளை திரித்து சொல்லவில்லை. மீனவர்கள் விரும்பியதை சொல்லியுள்ளோம்.

விவசாயிகள் போல மீனவர்களுக்கும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும். புதுவையில் துறைமுகம் ஆழம் குறையாமல் இருக்க வேண்டும். 2009 முதல் துறைமுகம் தூர்வாரப்படவில்லை. இந்த துறைமுகம் கட்டப்படும்.

மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல மீனவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். மற்ற மாநிலங்கள்போல புதுவை முன்னேற வேண்டும் என்ற ஆசை பிரதமருக்கு உள்ளது. அதனால்தான் என்னை புதுவைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மத்தியிலும் பா.ஜனதா, மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி வர வேண்டும். அப்படி வந்தால்தான் தடைபட்டு வந்த நிலை மாறி, முழு வேகத்தில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

தொண்டர்கள் தளர்ச்சியடையாமல் வீடு, வீடாக சென்று தேர்தல் அறிக்கையை எடுத்துக்கூறி ஏன் தாமரை மலர வேண்டும் என எடுத்து கூற வேண்டும். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால்தான் புதுவையின் தனித்தன்மை மேம்பாடு அடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.