Tamilசெய்திகள்

பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தது குறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஆனந்த் சர்மா விளக்கம்

காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய G-23 குழுவை சேர்ந்தவர் ஆனந்த் சர்மா. இவர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஆனந்த் சர்மா கூறியுள்ளதாவது:

நட்டாவை சந்திக்க தமக்கு முழு உரிமை உண்டு. அவரை சந்திக்க வேண்டும் என்றால் வெளிப்படையாகவே சந்திப்பேன். இதில் அரசியல் முக்கியத்தும் எதுவும் கிடையாது. நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்து வருகிறோம். கருத்து ரீதியாக எதிப்பாளராக இருப்பதால் எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் பகை இருப்பதாக அர்த்தமில்லை.

நட்டாவுடன் எனக்கு சமூக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் உறவுகள் உள்ளன. இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். எனது மாநிலம் மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த ஒருவர் ஆளும் கட்சியின் தலைவராக இருப்பதில் நான் பெருமைப் படுகிறேன்.

ஹிமாச்சலப் பிரதேச பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் என்னையும், நட்டாவையும் பாராட்ட அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே நட்டாவை ஆனந்த் சர்மா சந்திக்கவில்லை என்றும், தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.