Tamilசெய்திகள்

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் ஏற்பட்ட பிரச்சினையில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டார். ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பா.ஜனதா சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.

பின்னர் அண்ணாமலை நேற்று மாலை திடீரென்று கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். சுமார் 25 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு கொலை குறித்தும், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் பேசியதாக தெரிகிறது.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடந்து வரும் விதிமீறல்கள் குறித்தும் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அண்ணாமலையுடன் சென்றிருந்த ராணுவ வீரர்களும் கவர்னரிடம் புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 8.25 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் அவர் டெல்லிக்கு தனியாகவே சென்றார். அவருடன் வேறு யாரும் செல்லவில்லை.

டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை, அண்ணாமலை நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க திட்டமிட்டு உள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் அவர் புகார் அளிக்க இருப்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் நடந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை பட்டியலிட்டு அவர் புகார் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.