பா.ஜ.க தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் – தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியை வேண்டும் என்றே தமிழகத்தில் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வை ஒழித்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் சொல்கிறார். தமிழகத்தில் இனி தான் பா.ஜ.க. விஸ்வரூபம் எடுக்கப்போகிறது. நீங்களா? நாங்களா? என்று பார்த்துவிடுவோம்.
தமிழகத்தில் பா.ஜ.க.வை மு.க.ஸ்டாலினால் முடக்கவும், அடக்கவும் முடியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 19.5 சதவீதம் வாக்குகளை நாங்கள் பெற்றிருக்கிறோம். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியா? நாங்களா? என்று பார்த்துவிடுவோம்.
லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த ‘சாடிஸ்ட்’ மனப்பான்மை கொண்ட சோனியாகாந்தியை மேடையில் வைத்துக்கொண்டு பிரதமரை ‘சாடிஸ்ட்’ என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். தற்போது மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த (ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர்) மிகப்பெரிய திட்டம் நிச்சயம் தோல்வியில் முடிய போகிறது. எனவே மு.க.ஸ்டாலின் ‘சேடஸ்ட்’ ஸ்டாலின் என்று அழைக்கப்படுவார்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.