பா.ஜ.க எம்.பிக்கள் கிராமங்களில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்
பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். இந்த கொண்டாட்டத்தில் அனைத்து எம்.பி.க்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். அதுமட்டுமல்ல பா.ஜனதா எம்.பி.க்கள் கிராமங்கள் தோறும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
75-வது சுதந்திர தினம் வெறும் கொண்டாட்டமாக மட்டும் இருந்து விடக்கூடாது. அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு எம்.பி.க்கள் பணியாற்ற வேண்டும்.
பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி விவாதம் நடத்த தயாராக இருந்தும் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த வராமல் புறக்கணிப்பது குறித்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 2 கட்சி தொண்டர்கள் கொண்ட குழுக்களை உருவாக்கி அதன் மூலமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு குழுவும் 75 கிராமங்களுக்கு செல்ல வேண்டும். 75 மணி நேரம் அங்கு அவர்கள் செலவிட வேண்டும்.
மேலும் உள்ளூர் அளவில் விளையாட்டு போட்டிகள் போன்றவற்றை நடத்துவதுடன் தூய்மை பணிகளையும் செய்ய வேண்டும்.
சுதந்திரத்தின் நூற்றாண்டு தினமான 2047-ம் ஆண்டுக்குள் அரசு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மக்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள், அரசு நலத்திட்டங்கள் போன்றவற்றை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்.
இவ்வாறு மோடி கூறினார்.