Tamilசெய்திகள்

பா.ஜ.க உடன் கூட்டணி வைத்தது வருத்தளிக்கிறது என்று கூறிய அதிமுக நிர்வாகிக்கு பா.ஜ.க நிர்வாகி கண்டனம்!

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.யுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்க உள்ளது. இதனை கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்த போது உறுதியாக தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து பலரும் விமர்சித்து வரும் நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக உள்ளது. இஸ்லாமியர்கள் யாரும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்றார்.

மேலும், கூட்டத்தில் திருப்பூர் மாமன்ற எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் கூறுகையில், நிர்பந்தம் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுடன் அ.தி.மு.க. துணை நிற்கும் என்று அவர் நாதழுதழுக்க பேசினார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகளின் பேச்சுக்கு பா.ஜ.க.வின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

வணக்கம், குணசேகரன் அண்ணா உங்களுக்குத்தான் இந்த பதிவு. எதுவுமே கவலைப்படவேண்டியதில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததில் பிரச்சனை என்று சொல்கிறீர்கள். பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து தாங்கள் பேசியது தவறு. குணசேகரன் அண்ணா உங்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன்.

நீங்கள் 3 முறை வெற்றி பெற்ற வார்டுக்குள் இன்றைக்கு நீங்க எத்தனை வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 64 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தீர்கள். 484 வாக்கு பா.ஜ.க. வாங்குகிறது. இதுக்கு என்ன சொல்றீங்க? நீங்கள் தோற்றதுக்கும், பேசுறதுக்கும் எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சிக்கிறீர்கள். இது நல்லது இல்லைங்க அண்ணா… நீங்க தோற்றதுக்கு காரணம் பா.ஜ.க.வா? 3 முறை வெற்றி பெற்ற இடத்தில் ஏன் தோற்றீர்கள்? என்ன காரணம்? பா.ஜ.க. இல்லாததால் என்றார்.