Tamilசெய்திகள்

பா.ஜ.க. இருக்கும் கூட்டணியை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள் – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் மறைந்த முன்னாள் எம்.பி வசந்தகுமாரின் பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

அம்பேத்கர் நாட்டு மக்களுக்கு உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு பா.ஜ.க. ஆட்சியில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. சட்டத்தை பாதுகாக்கவும் கோர்ட்டுகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்டத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டு ஆர்.எஸ்.எஸ். சட்டத்தை நிலைநாட்ட மோடி அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளை சேர்த்து எந்த மாதிரியான கூட்டணி அமைத்து வந்தாலும் பா.ஜ.க. இருக்கும் கூட்டணியை தமிழக மக்கள் விரட்டி அடிப்பார்கள். ஒரு போதும் பாசிச பா.ஜ.க.வால் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அசன் மவுலானா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கோபண்ணா, கே.விஜயன், இதயத்துல்லா, தி.நகர் ஸ்ரீராம், மாவட்ட தலைவர் முத்தழகன், எம்.வி.ராமசாமி, எஸ்.கே.முகமது அலி, தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.