அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமைச்சர் பொன்முடியின் காரில் இருந்து சில ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில், தடயவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்று வருகிறது.
யார் பிரதமராக வரக்கூடாது என்பதே முக்கியம் என்ற முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்ததில் இருந்தே நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே அமலாக்கத்துறை சோதனை. எதற்காக இந்த சோதனை என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது. அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை.
அமலாக்கத்துறை அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அமலாக்கத்துறை வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? பா.ஜ.க. இதுபோன்று தொடர்ந்து செய்தால் கர்நாடகாவில் ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும். இதுபோன்ற சோதனைகள் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.