X

பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. காலையில் பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கு பிறகு தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது.

செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். அதைத்தொடர்ந்து பாராளுமன்ற மக்களவைக்குள் சென்று தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். மேலும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்பின், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், நீதிபதிகள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள், எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. ஆளும் முதல் மந்திரிகளை பிரதமர் மோடி சந்தித்தார்.

இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். வரவுள்ள பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், பிரதமரின் 9 ஆண்டு கால ஆட்சியை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.