பா.ஜ.க ஆட்சியை வழியனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொள்ளைகளும், வெற்று வாக்குறுதிகளும் நாட்டை ஆரோக்கியமற்றதாகி விட்டன. பிரதமர் மோடியின் ஒவ்வொரு வார்த்தையிலும் பொய் தான் இடம்பெற்றுள்ளது. அதிகமான எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை அமைத்ததாக பா.ஜனதா அரசு சொல்லிக் கொள்கிறது. அதே சமயத்தில், எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளில், டாக்டர் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 19 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.

கொரோனா சமயத்தில் அக்கறையின்மை காணப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தில் ஊழல் நடக்கிறது. நாட்டின் சுகாதார கட்டமைப்பை நோயாளியாக மோடி அரசு ஆக்கி விட்டது. தற்போது, மக்கள் விழிப்படைந்து விட்டனர். உங்கள் வஞ்சகத்தை புரிந்து கொண்டனர். உங்கள் ஆட்சியை வழியனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கார்கே கருத்துக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பதில் அளித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எங்கள் நோக்கம் புனிதமானது, தெளிவானது. காங்கிரசின் 50 ஆண்டுகால ஆட்சியில், ஒரே ஒரு எய்ம்ஸ் மட்டுமே திறக்கப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் திறக்கப்பட்டன. ஆனால், மோடி ஆட்சியில் 15 புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகள் திறக்கப்பட்டுள்ளன.

புதிய துறைகள் தொடங்கப்படும்போது, எய்ம்சின் தேவைக்கேற்ப பல கட்டங்களாக ஆள்தேர்வு நடக்கிறது. ‘வேலைவாய்ப்பு மேளா’ மூலம், 5 லட்சம் பணிநியமன கடிதங்களை பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார். தகுதி அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சுகாதார துறையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எந்த சாதனையாவது சொல்ல முடியுமா? அந்த ஆட்சியின் தோல்விகளை நாடு நன்றாக புரிந்து கொண்டுள்ளது. மோடி அரசு புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை திறக்கிறது. ஆள்தேர்வு நடக்கிறது. நீங்கள் அதை பார்த்துக் கொண்டிருங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news