பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் – அண்ணாமலை பேச்சு

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக முழுவதும் சட்டமன்றத் தொகுதிகளில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் லால்குடி அருகே உள்ள ஆங்கரை பிள்ளையார்கோவில் அருகில் தனது பாதயாத்திரை தொடங்கினார்.

பின்னர் மலையப்பபுரம், சந்தைப்பேட்டை வழியாக லால்குடி ரவுண்டானா பகுதியில் அந்த யாத்திரை நிறைவு பெற்றது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது;-

லால்குடி தொகுதியில் இளைஞர்கள் அதிக அளவில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறினார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகியும் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை.

காவல்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் இன்று வரை அந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என தங்களை பலப்படுத்திக் கொள்வதில் உறுதியாக இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் இந்த மாவட்டத்தில் எந்த வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை.

டாஸ்மாக் மதுவினால் ஏழை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது ஆகவே பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நான்கில் மூன்று பங்கு டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அதிகம் பாதிப்பு இல்லாத கள்ளுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை எடுத்து இந்து சமய அறநிலைத்துறை பெருந்திட்டவளாகம் கட்டுகிறேன் என்ற பெயரில் ரூ. 422 கோடியை எடுத்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஸ்வரூப தரிசனம் என்ற பெயரில் கட்டண கொள்ளை நடக்கிறது. குறைந்த பட்சம் ரூ. 1000 இருந்தால் தான் கோவில் பக்கம் செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலைத்துறை என்ற ஒரு துறையே இருக்காது. குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news