கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தலில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வணிகர்கள் பொருட்களுக்கு தரும் தள்ளுபடி போல பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ஏற்றிவிட்டு தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
அடிப்படை கலால் வரியில் மட்டும் தான் வருவாய் மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மற்ற கலால் வரி வருவாய் மத்திய அரசுக்கு தான் செல்கிறது. 50 சதவீதம் இருந்த அடிப்படை கலால் வரியை ஒன்றிய அரசு 4 சதவீதமாக குறைத்துள்ளது
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் மக்களை குழப்புவதற்காக அவதூறு அண்ணாமலையாக கிளம்பியுள்ளார்.
தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் நீட் தேர்வு, தொழிற் கல்விக்கு நுழைவுத்தேர்வினை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்தை வஞ்சிக்கும் அம்சங்கள் உள்ளது. தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கினை ஒன்றிய அரசு மாற்ற வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி தமிழக பா.ஜ.க. தலைமையகமான கமலாலயம் முன்பு காந்தி வழியில் போராட்டம் நடத்துவோம்.
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவுள்ள நிலையில் ஈழ நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று ஒன்றிய அரசின் கீழ் உள்ள சில அமைப்புகள் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு இடையூறாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக நினைவேந்தல் நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ கலந்து கொள்ளவில்லை.
தமிழ் ஈழம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்பதில் மாற்றம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.