பா.ஜ.க அரசின் நிதித்தொகுப்பை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்
ஊரடங்கால் நிலைகுலைந்துள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையிலும் சுயசார்பு இந்தியா என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த திட்டங்களை ஒவ்வொரு துறை வாரியாக நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்தடுத்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அறிவித்தார். இந்த சிறப்பு தொகுப்பு ஜிடிபியில் 10 சதவீதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதித் தொகுப்பை ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. ஊரடங்கால் அவதிப்படும் ஏழை மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கின் மூலம் பணம் வழங்கப்பட வேண்டும் என கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளருமான ஆனந்த் ஷர்மா காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதார நிதித்தொகுப்பு என்ற பெயரில் அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்துகிறது. மத்திய அரசு வெறும் ரூ.3.22 லட்சம் கோடிக்கு மட்டுமே பொருளாதார நிதித்தொகுப்பை அறிவித்திருக்கிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீதம் மட்டும்தான். பிரதமர் அறிவித்தபடி ரூ.20 லட்சம் கோடி மதிப்புடையது அல்ல.
பிரதமர் மோடி சொன்னபடி நடந்துகொள்ள வேண்டும். பொருளாதாரத்தை மீண்டும் துவக்க உதவும் வகையில் ஏழை மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கைகளில் பணத்தை கொடுத்து தேவையான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும்.
பொருளாதார ஊக்குவிப்பிற்கும், வெறுமனே மக்களுக்கு கடன்களை வழங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. நிதித்துறை மந்திரி வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது தொடர்பான விவாதத்திற்கு நிதி மந்திரி தயாரா? நான் தயார்.
எதிர்க்கட்சியை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கி பேசுவது அற்பமானது. அவரிடம் இருந்து இன்னும் தீவிரத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை நாடு எதிர்பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.