அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது.
அதிகாலையில் சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை தந்தனர்.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறார். அமலாக்கத் துறை சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. பா.ஜ.க. அரசின் எந்தவித அதிகாரமும் தி.மு.க.விடம் பலிக்காது. இதை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.