பா.ஜ.கவுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடம் – ஜெக்ரிவால் பிரசாரம்
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 10-ந்தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து டெல்லியில் மக்களவை தேர்தலைச் சந்திக்கின்றன.
இந்நிலையில், டெல்லி சாந்தினி சவுக் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி.அகர்வாலை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நான் சிறையிலிருந்து நேராக உங்களிடம் வந்துள்ளேன். பா.ஜ.க.வினர் என்னை சிறையில் அடைத்தபோது உங்களைப் பிரிந்து மிகவும் வருத்தமடைந்தேன். நான் ஒரு சாதாரண நபர். நமது ஆம் ஆத்மி கட்சியானது டெல்லி மற்றும் பஞ்சாபில் மட்டுமே ஆட்சி செய்துவரும் சிறிய கட்சியாகும். என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் செய்த தவறு என்ன?
பா.ஜ.க.வைப் பொறுத்தவரை நான் ஏழை மக்களுக்காக தரமான பள்ளிகள், இலவச கல்வி, 24 மணி நேர மின்சாரம் உள்ளிட்டவற்றை கொடுத்தது தான் நான் செய்த தவறாகும். இப்பொழுது நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள். நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள் என தெரிவித்தார்.