X

பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் போது காங்கிரஸும் உடன் இருக்க வேண்டும் – சரத்பவார் கருத்து

மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு
வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அவர், எதிக்கட்சிகள் ஆளும் முதல்-மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், “நாட்டின் அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரான பா.ஜனதாவின் நடவடிக்கைகள் குறித்து, வேதனையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். பா.ஜனதாவை எதிர்த்து போராடவும், நாட்டில்
தகுதியான அரசு அமையவும் நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும். இதற்கான வழிமுறைகள் குறித்து, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்த வேண்டும். எனவே, அனைவரின்
வசதிக்கு ஏற்ற நேரத்தில் நடைபெறும் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.

இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரிடம் மும்பையில் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி என்னிடம் பேசியிருந்தார். இதுகுறித்து மற்றவர்களிடம் நாங்கள் பேச வேண்டும். 9 முதல் 10 மாநில முதல்-மந்திரிகளிடம் பேச வேண்டும். அனைவரும்
ஒன்றுகூடி ஆலோசனை நடத்துவதற்கான தேதி, இடத்தை நிர்ணயிப்பது பற்றி பேச வேண்டியதுள்ளது. பா.ஜனதாவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை தொடங்கும்போது,
காங்கிரசையும் உடன் அழைத்து செல்ல வேண்டும். இதில் காங்கிரசை புறக்கணித்து செயல்படுவது சரியாக இருக்காது” இவ்வாறு அவர் கூறினார்.