பா.ஜ.கவில் இருந்து விலக மாட்டேன் – பங்கஜா முண்டே அறிவிப்பு

மகாராஷ்டிராவில் பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின்னர் கட்சி தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பாரதீய ஜனதாவில் இருந்து வெளியேற உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.

இதையெல்லாம் உறுதிபடுத்துவது போல் பங்கஜா முண்டேவின் நடவடிக்கையும் இருந்தது. அவர் தனது முகநூல் பக்கத்தில் ‘எதிர்கால பயணம்’ என பதிவு ஒன்றை வெளியிட்டு, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தை முடிவு செய்வேன் என தெரிவித்து இருந்தார்.

பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சி அமைத்து முதல்-மந்திரி ஆகியுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து தெரிவித்த பங்கஜா முண்டே, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து கட்சியின் பெயரான பாரதீய ஜனதா என்ற வார்த்தையையும் நீக்கினார்.

இதனால் பங்கஜா முண்டே பாரதீய ஜனதாவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய கூடும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதை பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மறுத்தார். இந்தநிலையில், நேற்று தென்மும்பையில் உள்ள வீட்டில் அவரை அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே,அக்கட்சி தலைவர் ராம் ஷிண்டே, பாபுராவ் லோனிகர் எம்.எல்.ஏ. ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

இதனால் பரபரப்பு உண்டான நிலையில், நிருபர்களை சந்தித்த பங்கஜா முண்டே, “நான் பாரதீய ஜனதாவில் இருந்து வெளியேற மாட்டேன். கட்சி தாவும் எண்ணம் என் ரத்தத்தில் கிடையாது” என்றார்.

முன்னதாக இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளையொட்டி முகநூல் பக்கத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், பாரதீய ஜனதாவின் சின்னமான தாமரையும் இடம் பெற்று இருந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news