பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நடிகை கவுதமி மீது எனக்கு எப்போதுமே அன்பு, பாசம், மரியாதை உண்டு. கட்சிக்காக தீவிரமாக உழைத்தவர். பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமி அளித்துள்ள கடிதம் மனவேதனை தருகிறது. அவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பேசினேன். அப்போது பா.ஜனதாவுக்காக தேசிய அளவில் பணியாற்ற வாருங்கள். உங்களுக்கு பொறுப்பு வழங்குகிறோம் என்று அழைத்தேன். அப்போது கவுதமி பரவாயில்லை மாநில அளவில் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார். மேலும் அவருடன் எண்ணற்ற கட்சி நிர்வாகிகள் தொடர்பில் உள்ளனர். மாநில அளவிலான கட்சி நிகழ்ச்சிகளில் கவுதமி தீவிரமாக பங்கெடுத்து வந்தார்.
எந்த நேரத்திலும் சோர்வு பாராமல் பணியாற்றக்கூடியவர். தைரியம்-தன்னம்பிக்கை மிகுந்த பெண்மணி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கவுதமியின் உதவியாளர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக உதவி கேட்டு இருந்தார். அப்போது நான் அவரிடம் அந்த நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முழு விவரங்களையும் அனுப்பி வையுங்கள், நிச்சயமாக உதவி செய்கிறோம் என்று சொல்லி இருந்தேன்.
இந்த நிலையில் பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக கவுதமியின் அறிக்கை மனவேதனை தருகிறது. நாங்கள் சட்டத்துக்கு புறம்பாக யாரையும் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ முற்படுவது இல்லை. கவுதமிக்கு உண்மையிலேயே என்ன பிரச்சினை என தெரியவில்லை.
அதுபற்றி முழுமையாக தெரிந்தால் தான் நாங்கள் விளக்கம் சொல்ல முடியும்.
பா.ஜனதா கட்சியில் நடிகை கவுதமி இருந்தது வரை அவர் கொடுத்த புகார் மீது ஆளுங்கட்சியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் எங்களின் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததும் அவரது புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்படியென்றால் நடிகை கவுதமிக்கு ஆளுங்கட்சியினர் நெருக்கடி கொடுத்து உள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது.
நடிகர் விஜய்யின் லியோ படத்தை இன்னும் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும்போது தான் பார்க்க வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை அரசியல், சினிமா ஆகிய இரண்டும் ஒன்றாக கலந்தது. திரைப்படங்களில் நல்ல கருத்துகள், பொழுதுபோக்கும் அம்சங்கள் இருந்தால் அது யார் நடித்த சினிமாவாக இருந்தாலும் பார்ப்பது தவறே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.