மேற்கு வங்காளத்தில் உள்ள முர்சிதாபாத் மக்களவை தொகுதிக்கான பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி ரோடு ஷோ நடத்தினார்.
அப்போது அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-
கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் இறங்க பா.ஜனதா முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை. எங்கள் கட்சியில் இருந்து இரண்டு எம்.பி.க்களை அவர்கள் இழுத்துக் கொண்டனர். அதற்குப் பதிலாக அவர்களுடைய எம்.பி.க்கள் அர்ஜுன் சிங், பாபுல் சுப்ரியோ எங்கள் கட்சியில் இணைந்தனர்.
சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனையை பயன்படுத்தி தபாஸ் ராய்-ஐ இணைத்துக் கொண்டது. பா.ஜனதாவின் குறைந்தது டாப் 10 தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய வரிசையில் உள்ளனர். சரியான நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது கதவை திறக்கும். பா.ஜனதா மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும்” என்றார்.
இதற்கு பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சமிக் பட்டச்சார்யா பதில் கூறுகையில் “இது தொடர்பாக கூறுவதில் ஒன்றுமே இல்லை. மேற்கு வங்காளத்தில் தோல்வியை சந்திக்க இருக்கும் விரக்தியில் அரசியல் சொல்லாடல்தான் இது. மக்களவை தேர்தல் முடிந்த உடன், திரிணாமுல் காங்கிரஸ் அட்டை பெட்டை போல் சிதைந்து போகும்” என்றார்.