Tamilசெய்திகள்

பா.ஜ.கவால் சமூக பொருளாதார பிரச்சனையை தீர்க்க முடியாது – ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கிய இந்த பாத யாத்திரை மொத்தம் 150 நாள்களாக 3,500 கிலோமீட்டர் தூரம் நடைபெறுகிறது.

இந்த பாத யாத்திரை கடந்த 10ந் தேதி கேரளாவில் நுழைந்தது. நேற்று மாலை கன்னியாபுரம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி, மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களிடையே வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டி தேர்தல்களில் வெற்றி பெறுவதாகவும், ஆனால் நாடு எதிர்கொள்ளும் சமூக பொருளாதார பிரச்சினை மற்றும் வேலை வாய்ப்பு பிரச்சினைகளை அது தீர்க்க முடியாது என்றும் கூறினார்.

மக்களின் குரல் அமைதியாகி விட்டதாகவும், ஆளும் கட்சியால் ஊடக நிறுவன உரிமையாளர்கள் மீது அழுத்தம் கொடுக்கப் படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து தமது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் கனவு உடைந்து விட்டாலும் சிதறவில்லை, அந்த கனவை நனவாக்க, நாங்கள் இந்தியாவை ஒன்றிணைக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கேரளாவில் 3வது நாள் பயணத்தை இன்று காலை கன்னியாபுரத்தில் இருந்து அவர் தொடங்கினார். ஏராளமான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். இந்நிலையில், ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் காங்கிரஸ் கட்சியை 100 மடங்கு புத்துணர்ச்சி அடைய செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் மொத்தம் 19 நாட்கள் ஏழு மாவட்டங்களை கடக்கும் இந்திய ஒற்றுமை பயணம் அக்டோபர் ஒன்றாம் தேதி கர்நாடகாவிற்குள் நுழைகிறது.