பா.ஜனதாவுக்கு சரியான நேரத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் – முதல்வர் குமாரசாமி

பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கூட்டணி ஆட்சியை காப்பாற்றி கொள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. ஆனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க அனைத்து முயற்சியிலும் பா.ஜனதா தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க நான் முயற்சிப்பதாக எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டை கொண்டாட எனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்தேன். அதனை எடியூரப்பா பெரிய குற்றச்சாட்டாக கூறினார். தற்போது எதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரியானாவில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளார்கள் என்று தெரியவில்லை.

வறட்சி பாதித்த தாலுகாக்களில் நிவாரண பணிகள் நடைபெறவில்லை என்று எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அரியானா ஓட்டலில் அமர்ந்து வறட்சி பாதித்த தாலுகாக்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்களா? என்பது குறித்து எடியூரப்பா தான் சொல்ல வேண்டும். நான் ஓரிரு நாட்கள் வெளிநாட்டுக்கு சென்றதை பெரிதுபடுத்திய எடியூரப்பா, ஒரு வாரத்திற்கும் மேலாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி மற்றும் அரியானாவில் தங்கி இருப்பது ஏன் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் செல்போன்களை பறித்து வைத்து கொண்டு இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது. இவை எல்லாம் எதற்காக பா.ஜனதாவினர் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் நினைப்பதாக நான் எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை. அதுபோன்ற தகவல்கள் பத்திரிகைகளில் தான் வருகிறது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை சரியாக வைத்துகொள்ள வேண்டியது, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் பொறுப்பு தான் என்று பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் அடைத்து வைப்பது கிடையாது. பா.ஜனதாவினர் தான் அப்படி செய்துள்ளனர்.

எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அதனால் அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளோம். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைப்பது, மாநிலத்தில் பா.ஜனதா செய்யும் அரசியல் நிலை குறித்து மக்கள் தினம் தினம் கவனித்து வருகின்றனர். பா.ஜனதாவுக்கு சரியான நேரத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools