பா.ஜக. அரசை பாராளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.
இது தந்தை பெரியார் மண்! பேரறிஞர் அண்ணா மண்! முத்தமிழறிஞர் கலைஞர் மண்! அதுமட்டுமா, அருட்பிரகாச வள்ளலார் மண்! பண்டிதர் அயோத்திதாசர் மண்! பெருந்தலைவர் காமராசர் மண்! கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மண்! பொதுவுடைமைத் தோழர் ஜீவா மண்! சுருக்கமாகச் சொன்னால், சமூகநீதிக் கொள்கை வழியில் பயணிக்கும் மதநல்லிணக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலத்தில் எழுச்சியுடன் நடந்தேறிய கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது.
கடல் இல்லா சேலத்தில் கழக இளைஞரணியினரின் தலைகளே கடலாக, மாநகரத்திலிருந்து மாநாடு நடைபெற்ற இடம் வரை 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு அசைந்தாடிய கருப்பு சிவப்பு இருவண்ணக்கொடிகளே அலைகளாக இருந்ததைக் கண்டபோது, மாநாட்டினை எழுச்சியும் உணர்ச்சியுமாக நடத்திக்காட்டிய இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் தம்பி உதயநிதிக்கும், மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டிருந்த கழகத்தின் முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேருக்கும், சேலம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், இளைஞரணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கண்துஞ்சாமல் அயராது பாடுபட்டதன் அறுவடையைக் காண முடிந்தது.
மாநாட்டு முகப்பில் சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் நினைவுக் கொடி மேடையில் இருவண்ணக் கொடியை உயர்த்தி வைத்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அன்புத் தங்கை கனிமொழி எம்.பி.க்கும், மாநாட்டுத் திறப்பாளர் மாணவரணிச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனுக்கும், மொழிப்போர்த் தியாகிகள் படத்தைத் திறந்து வைத்த சட்டமன்றக் கொறடா கோவி. செழியன் உள்ளிட்ட அனைவருக்கும் கழகத் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான என் நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாக்கும் பயிற்சி அரங்கமாக இளைஞரணியின் மாநாடு அமைந்திருந்த அதேவேளையில், வெறும் தேர்தல் அரசியலை மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுப்பதில்லை என்பதையும், தேர்தல் களத்திலும் கொள்கை வழி அரசியலையே முன்னெடுக்கும் என்பதையும் மாநாட்டின் மையப் பொருளாக அமைந்த, ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ அமைந்திருந்தது.
உதயநிதி முன்மொழிந்த மாநாட்டின் 25 தீர்மானங்களும் திராவிட மாடல் அரசு எந்தளவுக்கு மக்களுக்கான நன்மைகளைச் செய்து, மாநிலத்தின் வளர்ச்சியைப் பெருக்கியிருக்கிறது என்பதுடன், மாநில உரிமைக்கானப் போராட்டத்தில் நாம் முன்னெடுக்க வேண்டியவற்றையும் தீர்மானங்கள் வாயிலாகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இழந்த மாநில உரிமைகளை மீட்கவும், இருக்கின்ற மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநிலங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெறவும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் வகுத்தளித்த மாநில சுயாட்சிக் கொள்கையை நிறைவேற்றிட வேண்டும் என்பதையும், கல்வி – சுகாதாரம் இரண்டையும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டியதன் தேவையையும், பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தராக இருக்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலமைப்பில் தொங்கு சதையாக உள்ள நியமனப்பதவியான கவர்னர் பதவி முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதையும் இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உரக்கச் சொல்லியுள்ளன.
மதவெறி அரசியலால் மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்திருப்பதை மறைப்பதற்காக ஆன்மீகத்தையும் அரசியலாக்கும் வகையில் அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துகிறது என்பதை கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்ட நிலையில், இளைஞரணி மாநாட்டில் அதனைத் தீர்மானமாகவே முன்மொழிந்து, சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட – மிக பிற்படுத்தப்பட்ட – பட்டியல் இன – பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாக செயல்பட்டு வரும் பா.ஜக. அரசை வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.
சேலத்தில் நடந்த கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற கழகத்தின் அரசியல் எதிரிகளும், தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகளும் வதந்திகளைப் பரப்பி திசைதிருப்ப நினைத்தாலும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்படவேண்டும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், பல்வேறு தலைப்புகளில் நடந்த சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை முன்னெடுத்து, பாராளுமன்றத் தேர்தல் களத்தில் மதவெறி பாசிச சக்திகளை முறியடிக்கும் பணியில் முனைப்பாகச் செயல்படுங்கள். நம் திராவிட மாடல் கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம். பாராளுமன்றத் தேர்தலில் வெல்வோம்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.