X

பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தமிழக அரசுக்கு ரூ.13 கோடி வருவாய் கிடைக்கிறது

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பி.கே.அசோக்பாபு கூறியதாவது:-

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களின் கீழ் பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களும், தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்பட்டு வருகிறது.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் உள்ள மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் எளிதாக பெறுவதற்காக மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களில் சேவை மையம் தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதேபோல் வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து செயல்படுகிறது.

தபால் அலுவலக சேவை மையங்களிலேயே, வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள சேவை மையம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் வரை 20 ஆயிரத்து 526 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து தபால் அலுவலக சேவை மையம் மூலம் 62 ஆயிரத்து 35 பேர் பாஸ்போர்ட் பெற்று உள்ளனர்.

அதேபோல் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் சேலம், ராசிபுரம், ஈரோடு, குன்னூர் ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 41 ஆயிரத்து 831 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக சேலம் தலைமை தபால் அலுவலகம் மூலம் 28 ஆயிரத்து 34 பேர் பாஸ்போர்ட் பெற்று உள்ளனர். பாஸ்போர்ட் அலுவலகங்களை தேடி வராமல் அருகில் உள்ள தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெறுவதில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தலைமை தபால் அலுவலகங்களை பொறுத்தவரையில் சென்னையில் 62 ஆயிரத்து 35 பாஸ்போர்ட், கோயம்புத்தூரில் 41 ஆயிரத்து 831, திருச்சியில் 17 ஆயிரத்து 540, மதுரையில் 30 ஆயிரத்து 758 உள்பட மொத்தம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 164 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் திருப்பூர் ஆகிய 3 இடங்களில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில் விரைவில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட உள்ளது.

விரைவாக பாஸ்போர்ட்டுகள் வினியோகிக்கப்பட வேண்டும் என்பதற்காக விண்ணப்பங்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் குறித்து போலீஸ் விசாரணை செய்வதற்காக கடந்த ஆண்டு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 21 நாட்களுக்கு முன்பாக விசாரணை செய்து அளிக்கப்படுவதன் மூலம் பாஸ்போர்ட் அலுவலகம் மாநில அரசுக்கு வழங்கும் தொகையும் அதிகரித்து உள்ளது. செயலி அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக தமிழக அரசுக்கு பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் ரூ.10 கோடி அளவில் வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது செயலி அறிமுகப்படுத்த பின்னர் தமிழக அரசுக்கு ரூ.13 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. வரும் ஆண்டுகளில் கூடுதலாக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.