Tamilசினிமா

”பாலு நம் நட்பு பிரியாது” – இளையராஜா உருக்கம்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எஸ்.பி.பியின் நெருங்கிய நண்பரும் பிரபல இசையமைப்பாளருமான இளையராஜா உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்றுசேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது. அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி ஸ்வரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அது போன்றது உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை.

நாம் சண்டை போட்டாலும் சரி. நமது இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போது அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா!” என பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், அனிருத், தினா, தமன், இயக்குநர் ஹரி, நடிகர்கள் பிரசன்னா, யோகி பாபு, நடிகைகள் குஷ்பூ, ராதிகா, பாடகி சின்மயி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோரும் அவர் விரைந்து நலம் பெற வேண்டும் என்றும், அதற்காக பிரார்த்திக்குமாறும் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *