தலைவி பட சூட்டிங்குக்காக ஐதராபாத்தில் இருக்கும் நடிகை கங்கனா ரனாவத், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, தன்னுடைய கருத்துக்களை பேட்டியாக அளித்திருக்கிறார். அதில், திரையுலக பிரபலங்களை அவர் விமர்சித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத பாலிவுட் நடிகர்கள் வெட்கப்பட வேண்டும். பாலிவுட்டில் அனைவரும் கோழைகள். அவர்கள், தினமும் இருபது முறை கண்ணாடியில் தங்களை பார்த்துக் கொள்வர். ஏதாவது கேட்டால், எங்களுக்கு அனைத்தும் கிடைக்கிறது; நாங்கள் எதற்காக நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என்பர். வேறு சிலர் இருக்கின்றனர். அவர்கள், நாங்களே கலைஞர்கள். நாங்கள் ஏன் நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என கேட்பர்.
அவர்களையெல்லாம் அழைத்து வந்து, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து கருத்துச் சொல்ல வைக்க வேண்டும். அதனால் தான் அவர்களை எல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களின் நடவடிக்கையை மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு விட்டால் போதும் என நினைக்கின்றனர். அது மட்டும்தான் அவர்களுடைய வேலையா? அவர்கள் மக்களால் உருவாக்கப்பட்டவர்கள்.
அப்படி இருக்கும் போது, மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால், அவர்கள் இந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்பதை, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருப்பது, இன்ஸ்டாகிராம் போஸ்ட் போடவும், போதை பார்ட்டிகள் நடத்தவுமா? திரைத்துறையினர் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார்கள். அவர்கள் கோழைகள், முதுகெலும்பில்லாதவர்கள்.
அவர்கள் கோழைகளாக இருப்பதால் தான் சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு பிரச்னை ஏற்படுத்துகிறார்கள்; பெண்களை அவமதிக்கிறார்கள். அவர்களை தலைவர்கள் போன்று பார்ப்பதை நிறுத்த வேண்டும். நம் நிஜ முன் மாதிரி யார் என்கிற தெளிவு, நமக்கு இருக்க வேண்டும்.இவ்வாறு நடிகை கங்கனா கூறியிருக்கிறார்.