பாலியல் தொல்லை குறித்து விமானப் பணிப்பெண் வெளியிட்ட ஆதாரம்!
உலகம் முழுவதும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை ‘மீ டு’ என்கிற இயக்கத்தின் வாயிலாக பெண்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். சினிமாத்துறை தொடங்கி அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் பணியிடங்களில் உயர் அதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் பாலியல் துன் புறுத்தல்களுக்கு உள்ளானதை வெளி உலகிற்கு தெரியப்படுத்துகிறார்கள். இந்த நிலையில் வானத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான பணிப் பெண் ஒருவர் அதிர்ச்சி தெரிவித்து இருக்கிறார்.
ஹாங்காங்கின் தனியார் விமான நிறுவனத்தின் கீழ் இயங்கும் விமானங்களில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் வீனஸ் பங் என்பவர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஆதங்கத்துடன் கூறியதாவது:
வானத்திலும் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக பணியில் சேர்ந்து, முதல் முறையாக விமானத்தில் பணியை தொடங்கிய நாளில் விமானி ஒருவர் தவறான முறையில் என்னை தொட்டு தூக்கினார். அந்த தருணத்தில் கடும் கோபம் வந்தது. ஆனால் அதை விட பயமும், பதற்றமும் அதிகம் இருந்தது. நான் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டேன். நான் அதில் இருந்து மீண்டுவர பல நாட்கள் ஆனது.
இதுபோன்ற பாலியல் ரீதியான தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என விமானப்பணி பெண்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.