பாலாறு குறுக்கே 30 தடுப்பணைகள் கட்ட ஆந்திரா திட்டம்!
கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது.
தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 21 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க அம்மாநில அரசு கடந்த நவம்பர் மாதம் ரூ.41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு பாலாற்று பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது 500 மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்ற அடிப்படையில் பாலாற்றின் குறுக்கே புதிதாக மேலும் 30 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, அம்மாநில நீர்வள ஆதாரத்துறையின் சித்தூர், பலமநேர் கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம் மூலம் ஆந்திர அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதை வேலூர் மேம்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன், வேலூர் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதமும் உறுதிப்படுத்துகிறது.
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் பாலாறு பாலைவனமாக மாறி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மனு அனுப்பியிருப்பதாக வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் குழு உறுப்பினர் அசோகன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த 2000-2005ஆம் ஆண்டுகளில் ஆந்திர மாநிலம், கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணைகட்டி 40 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து, அந்த தண்ணீரை பல தடுப்பணைகள் கட்டித் தேக்குவதற்கு திட்டமிட்டு தொடர்ந்து தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதனால், பாலாற்றுப் படுகை பகுதியில் வேலூர், குடியாத்தம், ஜோலார்பேட்டை, பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர் ஆகிய மேல்பாலாற்றுப் பகுதிகள் ஏற்கெனவே கருப்பு வட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட வராமல் பாலாறு பாலைவனமாக மாறிவிடும்.
பாலாற்றுப் படுகையில் ஆந்திரா தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இனியாவது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.