கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. கதகளி, கணிதன், கடம்பன், கலகலப்பு-2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த அருவம் பேய் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு கதாநாயகி தேடி வந்தனர். பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹாவை அணுகினர். ஆனால் பாலகிருஷ்ணா வயதான நடிகர் என்பதை சுட்டிகாட்டி அவருடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். சோனாக்சி சின்ஹா, லிங்கா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு வேறு சில முன்னணி நடிகைகளை படக்குழுவினர் தொடர்பு கொண்டு பேசினர். அவர்களும் வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தால் இளம் கதாநாயகர்கள் புறக்கணித்து விடுவார்கள் என்று சொல்லி மறுத்து விட்டனர். இறுதியாக கேத்ரின் தெரசாவை அணுகினர். அவரோ தனக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்க தயார் என்று நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
அதை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை நடித்த படங்களில் ரூ.50 மற்றும் ரூ.60 லட்சமே கேத்ரின் வாங்கியதாகவும் இப்போது ரூ.1 கோடி சம்பளத்தை எட்டி உள்ளார் என்றும் பட உலகில் பேசப்படுகிறது. இந்த படத்தில் கேத்ரின் தெரசா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ந் தேதி தொடங்கப்பட உள்ளது.