பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறும் லியோனல் மெஸ்சி
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
சமீபத்தில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோபா அமெரிக்க கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியது. லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக இதுவரை 672 கோல்கள் அடித்து உள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 டிராபிகளையும் பெற்றுத் தந்துள்ளார்.
பார்சிலோனா கிளப்பில் இருந்து நெய்மர் வெளியேறியதிலிருந்தே, மெஸ்சிக்கும் கிளப்புக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்தது. கடந்த வருடம் மெஸ்சி வெளியேறுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஒப்பந்தம் முடிவடையாத காரணத்தால் மெஸ்சியை வாங்கும் அணி மிகப்பெரிய தொகையை (டிரான்ஸ்பர் பீஸ்) கொடுக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மெஸ்சி பார்சிலோனா கிளப்பிலேயே நீடித்தார்.
மனக்கசப்பு ஏற்பட்ட போதிலும், அடுத்த சில வருடங்களுக்கு மெஸ்சியை தக்க வைத்து கொள்ள பார்சிலோனா கிளப் தயராக இருந்தது. இதற்கான ஒப்பந்தமும் தயாராகின. ஆனால் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்பு காரணமாக ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் மெஸ்சி பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுவதாக அந்த கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக எந்தவித டிரான்ஸ்பர் பீஸ் இல்லாமல் மெஸ்சி வேறு அணிக்கு செல்லலாம்.
கடந்த 2000-ம் ஆண்டு இளம் வீரராக பார்சிலோனா அணியில் இணைந்த லியோனல் மெஸ்சி 21 ஆண்டுகளுக்களாக விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது.