Tamilசெய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சிகளை காண்பதற்காக பிரான்ஸ் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு 10 மணிக்கு விமானம் மூலம் பாரீஸ் சென்றார். அவருடன் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் மொத்தம் 117 வீரர்கள் பங்கேற்க சென்று உள்ளனர். இதில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களை அடுத்து அதிக விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு அனுப்பி உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 11 வீரர், வீராங்கனைகள் மற்றும் 6 மாற்று திறனாளிகள் உள்பட மொத்தம் 17 பேர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இந்த 17 வீரர்களுக்கும் முதல்-அமைச்சர் உத்தரவுப் படி தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் 1.19 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்திய விளையாட்டு துறையின் தலைநகராக தமிழ்நாட்டை உயர்த்துவதே லட்சியம் என்று கூறி வருகிறார். அந்த வகையில் பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியை பார்வையிடவும் தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்க்கவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு துறை அதிகாரிகளுடன் பாரிஸ் சென்றுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் 6 நாட்கள் தங்கி இருக்கும் அவர் 14-ந்தேதி சென்னை திரும்புவார் என தெரிகிறது.