பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் கிரீஸ் நாட்டில் நேற்று ஏற்றப்பட்டது
33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
போட்டிக்கான ‘கவுண்டவுன்’ தொடங்குவதை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவது நெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஒலிம்பியாவில் நேற்று நடந்தது.
வழக்கமாக சூரியஒளியை குவிலென்சின் மையத்தில் விழச் செய்து, அதில் இருந்து உருவாகும் வெப்பத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும். ஆனால் நேற்று ஒலிம்பியாவில் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிலவியதால் சூரியஒளியை பார்க்க முடியவில்லை. வானிலை மாற்றம் குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டு இருந்ததால் அதற்குஏற்ப மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி கிரேக்கத்தின் பாரம்பரிய உடையணிந்த நடிகை மேரி மினா சூரிய கடவுளை நோக்கி வணங்கி விட்டு அங்கு சிறிய பானையில் எரிந்து கொண்டிருந்த ஜூவாலையில் தீபத்தை ஏற்றினார். சிறிது நேரத்தில் மேகக்கூட்டம் கலைந்து சூரிய ஒளியும் பளிச்சிட்டது.
அதன் பிறகு ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸ் துடுப்பு படகு வீரர் ஸ்டீபனோஸ் நிடோஸ்கோஸ் முதல் நபராகவும், அதைத் தொடர்ந்து பிரான்ஸ் நீச்சல் வீராங்கனை லாரே மனவ்டோவும் சிறிது தூரம் தீபத்தை தொடர் ஓட்டமாக எடுத்துச் சென்றனர். கிரீஸ் நாடு முழுவதும் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் தீபம் பயணிக்கிறது. அது முடிந்து வருகிற 26-ந்தேதி பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் தீபம் ஒப்படைக்கப்படுகிறது.
பின்னர் ஒலிம்பிக் தீபம் பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு 400 நகரங்களில் தொடர் ஓட்டம் நடைபெறுகிறது. இங்கு ஏறக்குறைய 10 ஆயிரம் பேரின் கைகளில் தீபம் தவழ இருக்கிறது. இறுதியில் தொடக்க விழா நடைபெறும் பாரீசுக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள மெகா கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டதும் போட்டி தொடங்கும்.
ஒலிம்பிக் தீபம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச் பேசுகையில், ‘ஒலிம்பிக் மட்டுமே ஒட்டுமொத்த உலகத்தையும் இந்த அமைதியான போட்டியில் ஒன்றிைணக்கிறது. வீரர், வீராங்கனைகள் முடிந்த அளவுக்கு கடும் சவாலுடன் மோதிக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் நாம் அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் ஒரே குடைக்குள் வாழ்கிறோம் என்பதையும் உணர்த்துகிறார்கள்’ என்றார்.
மேலும் அவர், ‘இது ஒரு கடினமான காலக்கட்டம். அதிகரித்து வரும் போர், மோதல்கள் மற்றும் நாள்தோறும் எதிர்கொள்ளும் வெறுப்பு, எதிர்மறை செய்திகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். நம்மை ஏதாவது ஒன்று ஒன்றிணைத்து விடாதா என்று ஏங்குகிறோம். இன்று ஏற்றப்பட்டுள்ள ஒலிம்பிக் சுடர் அந்த நம்பிக்கையின் சின்னமாக தெரிகிறது’ என்றும் குறிப்பிட்டார்.