பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பே 90 மீட்டர் இலக்கை எட்டுவேன் – தடகள வீரர் நீரஜ் சோப்ரா

இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும், அதைத் தொடர்ந்து உலக தடகளத்திலும் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். இப்போது ஜூலை – ஆகஸ்டு மாதத்தில் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் மீண்டும் மகுடம் சூடும் உத்வேகத்துடன் தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார். அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்துள்ளார்.

இந்த நிலையில் தனது அடுத்தக்கட்ட இலக்கு குறித்து ஆன்லைன் மூலம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டி எறிய முயற்சிப்பேன். எல்லாமே சரியாக அமைந்தால், 90 மீட்டர் இலக்கை பார்க்க மக்கள் ஒலிம்பிக் வரை காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பாகவே நடந்து விடும் என்று நம்புகிறேன். அதற்கு ஏற்ப தயாராகி உள்ளேன்.

இந்த சீசன் தொடங்கிய போது உடல்தகுதி மற்றும் உடல் வலிமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினேன். ஈட்டி எறிதலுக்கு என்று பிரத்யேகமாக எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் தொழில்நுட்பத்தில் நான் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளேன். மேலும் தென்ஆப்பிரிக்கா மற்றும் துருக்கியில் மேற்ெகாண்ட பயிற்சிகள் நல்லவிதமாக அமைந்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு எனது தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. அதன் பிறகு இரண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளேன். அவற்றில் ஒன்றில் வெள்ளியும், மற்றொன்றில் தங்கமும் வென்றேன். டைமண்ட் லீக் தடகளத்தில் கோப்பையை கைப்பற்றினேன். ஆசிய விளையாட்டில் பட்டத்தை தக்க வைத்தேன். டோக்கியோ மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு இடைப்பட்ட காலத்தில் கிடைத்த இந்த வெற்றிகள் நிறைய நம்பிக்கையை தந்திருக்கிறது. எந்த நிலையிலும், எத்தகைய போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.

அடுத்த மாதத்தில் தோகா டைமண்ட் லீக் மற்றும் ஜூன் மாதத்தில் பாவோ நூர்மி விளையாட்டில் பங்கேற்க உள்ளேன். ஒலிம்பிக்குக்கு முன்பாக 3-4 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools