X

பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 – இந்திய வீராங்கனை தீப்தி உலக சாதனைப் படைத்து தங்கம் வென்றார்

மாற்றுத் திறனாளிகளுக்கான 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற பாரா தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி உலக சாதனை படைத்து இந்த வருடம் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

பெண்களுக்கான 400 மீ டி20 பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி, 55.06 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து முந்தைய உலக சாதனையை முறியடித்துதுள்ளார். இந்தப் போட்டியில், 59.00 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து தாய்லாந்து வீராங்கனை ஓரவன் கைசிங்கை வெள்ளிப் பதக்ககமும், ஜப்பான் வீராங்கனை நினா கன்னோ 59.73 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

கோபே யுனிவர்சியேட் மெமோரியல் ஸ்டேடியத்தில் 17 முதல் 25 மே 2024 வரை நடைபெறும் இந்த போட்டிகளில் நேற்று (மே 19) போட்டியின் மூன்றாவது நாளில் ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024ல் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.

கடந்த பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா மூன்று தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்றிருந்ததது. முன்னதாக, தீப்தி ஜீவன்ஜி 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பெண்கள் 400 மீட்டர் பிரிவில் 56.18 வினாடிகளில் 400 மீட்டர் எட்டி ஆசிய அளவில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.