பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் – 17 பதக்கங்கள் வென்று இந்தியா அசத்தல்
சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது. போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் அடங்கும். இதன் மூலம் இந்தியா பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
தற்போது இந்தியா வென்று இருக்கும் 17 பதக்கங்களில் 11 பதக்கங்கள் டிராக் அண்ட் ஃபீல்டு பிரிவுகளில் இருந்தே கிடைத்துள்ளன. இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலமும் வென்றார்.
இதைதொடர்ந்து, ஆடவர் F51 கிளப் எறிதல் போட்டியிலும் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதேபோன்று ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் தாமா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
போட்டியை நடத்தும் சீனா 31 தங்கம், 29 வெள்ளி, 23 வெண்கல பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஈரான் 9 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், உஸ்பெகிஸ்தான் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.