பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.க்களில் 57 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதையொட்டி புதிதாக 57 எம்.பி.க்களை தேர்வு செய்ய தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மாநிலங்களவை தி.மு.க. எம்.பி.க்களான டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க. எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலம் வருகிற ஜூன் 29-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
காலியாகும் இந்த 6 இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை)தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மே 31. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ந்தேதி, மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
போட்டி இருக்கும் பட்சத்தில் வாக்குப்பதிவு ஜூன் 10-ந்தேதி நடைபெறும். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன் 13-ந்தேதி நிறைவடையும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் தி.மு.க.வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு அதன் கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் 2 இடங்களும் கிடைக்கும். தனக்கு கிடைக்க உள்ள 4 இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு தி.மு.க. தலைமை அளித்துள்ளது.
தி.மு.க. வேட்பாளர்களாக தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
மேல்சபை தேர்தலில் இரு இடங்களில் போட்டியிட உள்ள அ.தி.மு.க. இதுவரை வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கவில்லை. இன்று (திங்கள் கிழமை) அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல ஓரு இடத்தில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலும் எம்.பி. பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனக்கு எம்.பி. பதவி வேண்டும் என்று ஏற்கனவே சோனியா, ராகுலிடம் தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அவர் இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசி இருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து எம்.பி. பதவிக்கு தேர்வான ப.சிதம்பரம் தமிழகத்தில் இருந்து தேர்வாக வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளார்.
ப.சிதம்பரம் எம்.பி.யாகும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் பா.ஜனதா கட்சியின் பொருளாதார கொள்கைக்கு காங்கிரஸ் சார்பில் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்று மேலிட தலைவர்கள் கருதுகிறார்கள்.
எனவே மேல்சபை எம்.பி. பதவியை ப.சிதம்பரத்துக்கு கொடுக்க மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்கிறார். இதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றுள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேச உள்ளார். அப்போது எம்.பி. பதவியை கேட்டு அவர் சில விளக்கமும் அளிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
கே.எஸ்.அழகிரி மூன்று விஷயங்களுக்காக தனக்கு மேல்சபை எம்.பி. பதவி தர வேண்டும் என்று கூறுவதாக தெரிகிறது.
1. மூன்று ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்கும் தனக்கு எதிராக யாரும் எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. இந்த 3 ஆண்டுகளில் எதிர்ப்பு கோஷ்டியினர் யாரும் தன்னை பதவி விலக சொல்லவில்லை.
2. இந்த 3 ஆண்டு காலத்தில் தமிழக காங்கிரசுக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை பெற்று கொடுத்து இருப்பதால் காங்கிரசுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்து உள்ளேன். இதை கருத்தில் கொண்டு மேல்சபை எம்.பி. பதவி தர வேண்டும்.
3. பாராளுமன்ற தேர்தல் 2019-ம் ஆண்டு நடந்தபோது தேர்தலில் போட்டியிடாமல் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். அப்போது எம்.பி. பதவியை தியாகம் செய்து இருந்தேன். எனவே மேல்சபை எம்.பி. பதவி தர வேண்டும்.
இப்படி 3 விதமான கோரிக்கைகளை கே.எஸ்.அழகிரி தெரிவித்து வருகிறார்.
கே.எஸ்.அழகிரியின் இந்த கோரிக்கையால் காங்கிரஸ் மேல்சபை வேட்பாளர் தேர்வில் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி இடையே கடும் போட்டி உருவாகி இருக்கிறது. கே.எஸ்.அழகிரியின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும். இதற்கிடையே சுதர்சன நாச்சியப்பன், இளங்கோவன், விஸ்வநாதன் ஆகியோரும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்கிறார்கள்.
தமிழகத்தில் இருந்து மேல்சபைக்கு காங்கிரஸ் சார்பில் தலித் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. எனவே தனக்கு அந்த வாய்ப்பு தர வேண்டும் என்று விஸ்வநாதன் வலியுறுத்தி வருகிறார். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் வாய்ப்பு ப.சிதம்பரத்திடம் இருந்து நழுவி செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் ராகுல்காந்தியின் முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது. அவர் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். இன்று இரவுதான் டெல்லிக்கு திரும்புகிறார். நாளை அவர் மேல்சபை எம்.பி. வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவே கர்நாடகா உள்பட பல மாநில காங்கிரஸ் தலைவர்கள் மேல்சபை எம்.பி. பதவி கேட்டு டெல்லியில் குவிந்து இருக்கிறார்கள். தமிழக தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.
எனவே நாளை ராகுல் தலைமையில் விறுவிறுப்பான ஆலோசனை நடைபெற உள்ளது. அப்போது தமிழக மேல்சபை வேட்பாளர் குறித்து முடிவாகிறது. என்றாலும் வேட்பாளர் பெயர் விவரம் வெளியாக ஓரிரு நாட்கள் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.