X

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முடிவடைகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளை சந்தித்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று (வெள்ளிக்கிழமை) 17-வது நாளுடன் நிறைவு பெற உள்ளது.

இந்த கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை முக்கிய அம்சமாக எதிரொலித்தது. கூட்டம் தொடங்கிய நாள் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது வரை எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன.

எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்த பின்னர் நடைபெற்ற முதல் கூட்டம் என்பதால் அனைத்து பிரச்சினைகளிலும் எதிர்க்கட்சிகள் சேர்ந்தே குரல் கொடுத்தன. அதற்கு முத்தாய்ப்பாக மோடி குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் பெற்ற ராகுல்காந்தியின் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு அவர் எம்.பி. பதவியை தக்கவைத்த நிகழ்வு எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்தது.

எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் அணி திரண்டாலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறிதும் தயங்காமல் எதிர்க்கட்சிகளை எதிர்கொண்டன. காரசார விவாதங்களுக்கு மத்திய மந்திரிகள் சளைக்காமல் பதிலளித்து எதிர்க்கட்சிகளை திணறடித்தனர். மணிப்பூர் கலவர பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல் , மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், விரிவான விவாதத்திற்கு கடைசி வரையில் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

இதை தொடர்ந்து எதிர்க் கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானம் மீதான விவாதம் கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. ராகுல்காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்துக்கள் தெரிவித்து பேசிய நிலையில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்தார்.

சுமார் இரண்டரை மணிநேரம் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியதும், தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாகும். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

டெல்லி நிர்வாக சீர்திருத்த சட்டம் இந்த கூட்ட தொடரில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முன்னதாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ராகுல்காந்தி பங்கேற்று பேசியது, அவர் பேசி நிறைவு செய்ததும் பறக்கும் முத்தம் கொடுத்ததால் எழுந்த சர்ச்சை போன்றவையும் இந்த கூட்ட தொடரின் நிகழ்வாக இருந்தது.

ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், சேவைகளின் நிபந்தனைகள் மற்றும் பதவி காலம் குறித்த மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவையும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக நிறைவுநாளான இன்று ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தய கிளப்புகளில் கட்டப்படும் தொகைக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: tamil news