பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் – 47 மசோதாக்களை விவாதிக்க மத்திய அரசு திட்டம்

கொரோனா அச்சுறுத்தல், எல்லையில் சீன படைகளின் அத்துமீறல் மற்றும் பொருளாதார பிரச்சினையில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகள் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. அப்போது பிரதமர் மோடி மற்றும் எம்பிக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர்.

முதல் நாளான இன்று மக்களவை கூட்டம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும்.

மாநிலங்களவை கூட்டம் முதல் நாளான இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் நடைபெறுகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. எம்.பி.க்கள் மொபைல் செயலி மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கூட்டம் நடத்துவதற்காக இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மக்களவை மண்டபத்தில் 257 உறுப்பினர்களும், பார்வையாளர்கள் மாடத்தில் 172 உறுப்பினர்களும் அமர வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மாநிலங்களவை மண்டபத்தில் 60 உறுப்பினர்களும், பார்வையாளர்கள் மாடத்தில் 51 உறுப்பினர்களும் அமர வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கேமரா மூலம் சபாநாயகரிடம் பேசுவார்கள்.

பெஞ்சுகளுக்கு இடையே எளிதில் பார்க்கக்கூடிய தகடுகள் வைக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 மாதங்களுக்கு பிறகு தொடங்கி உள்ள இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 1-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் நிதி தொடர்பான 2 விவகாரங்கள் உள்பட 47 மசோதாக்களை விவாதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools