X

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியபோது, நீட் தேர்வு தொடர்பான பிரச்சனையை திமுக எழுப்பியது. திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும்போது, நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 12 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார்.

‘நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட 12 மாணவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த அவை மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அவர்கள் பிளஸ் 2-ல் மாநில பாடத்தில் படித்து தேர்ச்சி பெற்றனர். ஆனால், நீட் தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான ஒரு மாதத்திற்குள் நீட் தேர்வு வருகிறது. எனவே, அவர்களால் தங்களை தயார்படுத்த முடியவில்லை.

சிபிஎஸ்இ பாடத்திட்டம் பற்றி தெரியாமல், உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் அவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துள்ளனர்’ என டிஆர் பாலு பேசினார்.