Tamilசெய்திகள்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 14 ஆம் தேதி தொடக்கம்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 14-ந்தேதி தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 18 நாட்கள் இத்தொடர் நடக்கிறது. முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி இரு அவைகளும் நடத்தப்பட உள்ளன. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மழைக்கால கூட்டத்தொடரில் கொரோனா கால கட்டுப்பாடுகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது தொடர்பாக மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.

மழைக்கால கூட்டத் தொடரின் செயல்பாடுகள் குறித்து மக்களவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டத்தொடரின் முதல் நாளில் (செப்-14) மட்டும் காலை 9 மணி முதல் மதியம் வரை கூட்டம் நடைபெறும் என்று கூறி உள்ளார். மற்ற நாட்களில் அதாவது, செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1ம் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும் கூறி உள்ளார்.

மாநிலங்களவை கூட்டம் முதல் நாளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி நேரம், தனி நபர் மசோதா கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிக்கள் முக்கிய பிரச்சினைகளை எழுப்ப வாய்ப்பாக இருந்த கேள்வி நேரத்தை ரத்து செய்திருப்பது எதிர்க்கட்சி எம்பிக்களிடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது.