X

பாராளுமன்ற தேர்தல் – 5 ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை தொடக்கம்

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்டது.

முதல் கட்டமாக கடந்த 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 18-ந்தேதி 95 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், 4-வது கட்டமாக 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடந்தது. இதுவரை 373 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து உள்ளது.

5-வது கட்ட வாக்கு பதிவு நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

5-வது கட்ட ஓட்டுப் பதிவில் 51 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

பீகார் (5), காஷ்மீர் (2), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (7), ராஜஸ்தான் (12), உத்தரபிரதேசம் (14), மேற்கு வங்காளம் (7).

இந்த 51 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஒய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வயநாடுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. அமேதி தொகுதிக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதேபோல ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா போட்டியிடும் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

நாளை வாக்குப் பதிவை சந்திக்கும் மற்ற முக்கிய தலைவர்கள் வருமாறு:-

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் (லக்னோ), ஸ்மிருதி இரானி (அமேதி), ரத்தோர் (ஜெய்ப்பூர், ரூரல்), ஜெயந்த்சின்கா, அர்ஜின்ராம் மேக்வால். இந்த 51 தொகுதிகளில் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

5-வது கட்ட தேர்தலில் 8.76 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள். அதில் ஆண் வாக்காளர்கள் 4.63 கோடி பேர் ஆவார்கள். 4.12 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 96,088 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags: south news