பாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்ட தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடை பெற்றது.
இன்று (திங்கட்கிழமை) 5-வது கட்டமாக உத்தர பிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மேற்கு வங்காளம் (7), மத்திய பிரதேசம் (7), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), காஷ்மீர் (2) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளிலும் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், ஜெயந்த் சின்கா, அர்ஜுன்ராம் மேக்வால், வீரேந்திர குமார், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், சத்ருகன்சின்காவின் மனைவி பூனம் சின்கா, முன்னாள் முதல்-மந்திரிகள் அர்ஜுன் முண்டா, பாபுலால் மாரண்டி ஆகியோர் இன்று களத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர்கள். 51 தொகுதிகளிலும் 8 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பதற்காக 96 ஆயிரத்து 88 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. காலை 10 மணி நிலவரப்படி சராசரியாக 12.65 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 16.56 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
ராஜ்நாத்சிங் போட்டியிடும் லக்னோ, சோனியாவின் ரேபரேலி, ராகுலின் அமேதி தொகுதிகளில் வாக்குப்பதிவு எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு நடந்து வரும் 7 தொகுதிகளும் பதற்றமான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த 7 தொகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
மேற்கு வங்க மாநிலத்தில் பல ஓட்டுச்சாவடிகளில் மின்னணு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அவுரா தொகுதியில் 289, 291, 292 ஆகிய எண்கள் கொண்ட வாக்குச்சாவடிகளில் நீண்ட நேரம் ஓட்டுப்பதிவு தொடங்காமல் இருந்தது. மாற்று எந்திரங்கள் வந்த பிறகே ஓட்டுப்பதிவு தொடங்கியது.
லக்னோ தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் காலை 7.30 மணியளவில் சென்று வாக்களித்தார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த 51 தொகுதிகளில் 39 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா சாதனை படைத்திருந்தது.
திரிணாமுல் காங்கிரஸ்-7, காங்கிரஸ்-2, ராஷ்டீரிய லோக் ஜனசக்தி, பி.டி.பி, எல்.ஜே.பி. ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. ஆனால் இந்த தடவை பா.ஜனதாவுக்கு அத்தகைய வெற்றி கிடைக்குமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இதனால் இன்று நடக்கும் 5-வது கட்ட தேர்தல் பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இன்று களத்தில் நிற்கும் 674 வேட்பாளர்களில் 126 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 95 பேர் மீது மிக கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன.
அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களில் 41 பேர் கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்களில் 27 பேர், பகுஜன் சமாஜ் கட்சியில் 16 பேர், சமாஜ்வாடி கட்சியில் 14 பேர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் 7 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருக்கின்றன.
674 வேட்பாளர்களில் 184 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள் என்று தெரிய வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியில்தான் அதிகபட்சமாக 38 வேட்பாளர்கள் கோடீசுவரர்களாக உள்ளனர்.
51 தொகுதிகளிலும் மாலை 5 மணி வரை ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 4 தொகுதிகளில் மட்டும் பாதுகாப்பு கருதி மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
இன்றுடன் 424 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு முடிந்து விடுகிறது. இன்னும் 118 தொகுதிகளுக்குத்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
வருகிற 12-ந்தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 6-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 19-ந்தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு 7-வது கட்ட இறுதி தேர்தல் நடக்கிறது. அத்துடன் ஓட்டுப்பதிவு அனைத்தும் முடிந்து விடும்.
23-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும். இந்த தடவை ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணி சரி பார்க்க வேண்டியதிருப்பதால் பிற்பகலில் தான் முடிவுகள் தெரியத் தொடங்கும்.