பாராளுமன்ற தேர்தல் – விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்த அதிமுக

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளை அ.தி.மு.க. மேற்கொண்டுள்ளது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து கடந்த 4-ந்தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனுக்களை வாங்கி சென்று, பூர்த்தி செய்து சமர்பித்தனர்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், தற்போதைய அ.தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்தனர்.

விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு 10-ந்தேதி (அதாவது, நேற்று) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், அ.தி.மு.க. எம்.பி.யுமான டாக்டர் ஜெ.ஜெயவர்தன் மீண்டும் தென்சென்னை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.

எம்.பி.க்கள் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, எஸ்.ஆர்.விஜயகுமார், ஈரோடு முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜக்கையன் மகன் பாலு மணிமார்பன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி லியாகத் அலிகான் உள்பட பலரும் நேற்று போட்டி போட்டு விருப்ப மனு அளித்தனர். இதன் காரணமாக சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று தொண்டர்கள் கூட்டத்தால் களைக்கட்டியது.

இந்தநிலையில் அ.தி.மு.க.வில் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், ‘அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு பெறும் கால அளவை நீட்டித்து தருமாறு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளை ஏற்று, அ.தி.மு.க.வினர் தங்களுடைய விருப்ப மனுக்களை வருகிற 14-ந்தேதி(வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை வழங்கலாம்.’ என்று தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நேற்று வரை 7 நாட்கள் விருப்ப மனு வினியோகம் நடந்துள்ளது. 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்பட்டது. இதுவரையில் மொத்தம் 1,400 பேர் போட்டியிட மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools