17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.
இதுதவிர ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் காலியாக இருந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய 8040 வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகர போலீசார் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், காகிதம் ஆகியவற்றை மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.