பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்! – மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு
பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 9.45 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 107 தொகுதிகளிலும், மற்றவை 92 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது. இந்த கருத்துக் கணிப்புகளை உறுதி செய்யும் வகையில், தற்போது பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முந்துகிறது.
இந்த முன்னிலை நிலவரத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டு சில தொகுதிகள் குறைந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது. தற்போதைய முன்னிலை நிலவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பாஜக கூட்டணிக்கு சிக்கல் உருவாகும்.
அதேசமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், அவர்களின் கூட்டணியில் இடம்பெறாத மற்ற கட்சிகளும் கிட்டத்தட்ட 90 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. பாஜகவுக்கு சற்று சறுக்கல் ஏற்படும் பட்சத்தில், இந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளது.