பாராளுமன்ற தேர்தல் பணி! – 15 லட்சம் பா.ஜ.க தொண்டர்களுக்கு பயிற்சி
பா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதரராவ். இவர் அக்கட்சியின் பயிற்சி துறை பொறுப்பாளராகவும் பதவி வகிக்கிறார். டெல்லியில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் பணிகளில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது 1 லட்சம் கட்சி தொண்டர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக பணியாற்றினார்கள். அதன் பயனாக பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது.
அதே பாணியில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலிலும் பணியாற்ற இருக்கிறோம். அதற்காக 15 லட்சம் பா.ஜனதா தொண்டர்களுக்கு தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த தேர்தலைவிட 15 மடங்கு தீவிரமாக பணியாற்றுவார்கள்.
2015-ம் ஆண்டில் இருந்து இதே பாணியில் பயிற்சி பெற்ற தொண்டர்கள் மூலம் தேர்தல் பணியாற்றி தொடர் வெற்றிகளை பெற்று இருக்கிறோம். அதே போன்று வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெறும் என்றார்.
மேலும் அவர் கூறும் போது, “நன்கு பயிற்சி பெற்ற தொண்டர்களின் பணியின் மூலம் பல்வேறு சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். சில மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கடும் போட்டி கொடுத்து இருக்கிறோம். சிறப்பாக செயலாற்றியுள்ளோம்.
ராஜஸ்தானை பொறுத்த வரை பல பா.ஜனதா தலைவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையேயான தகவல் பரிமாற்ற இடைவெளி இருந்தது. அதனால்தான் அங்கு சரிவு ஏற்பட்டது. அது சரி செய்யப்படும். தொண்டர்கள்தான் பா.ஜனதாவின் முதுகெலும்பு ஆவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.