பாராளுமன்ற தேர்தல் – தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டி இல்லை

பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சி போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 1982-ம் ஆண்டு கட்சி தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுபற்றி கட்சியின் மாநில தலைவர் எல்.ரமணா கூறும்போது, “பா.ஜனதா மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய இரு கட்சிகளும் ஜனநாயகத்துக்கும், அரசியல்சாசனத்துக்கும் எதிராக வேலை செய்கின்றன. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது. எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் போட்டியிடுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பழைய செல்வாக்கை மீண்டும் பெற கட்சி மேலும் கடுமையாக உழைக்கும்” என்று கூறியுள்ளார்.

2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்குதேசம் மால்காஜ்கிரி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்று எம்.பி.யான மல்லா ரெட்டி, பின்னர் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்துவிட்டதும், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே தெலுங்குதேசம் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news