பாராளுமன்ற தேர்தல் – தெலுங்கானாவில் போட்டியிட சோனியா காந்தி முடிவு?
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தெலுங்கானா காங்கிரசின் அரசியல் விவகார குழு கூட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது.
இதில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு பாராளுமன்ற தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்து வரும் நிலையில் தென் மாநிலங்களில் சோனியா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெலுங்கானா மாநில முன்னாள் மந்திரி சபீர் அலி கூறுகையில்:-
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு சோனியா காந்தி அறிவித்த 6 முக்கிய வாக்குறுதிகள் தான் காரணம். மேலும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பிரசாரம் கிராமங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கானா தனி மாநிலம் உருவாக காரணமாக இருந்த சோனியா காந்திக்கு தெலுங்கானா மக்கள் நன்றி தெரிவிக்கும் விதமாக வெற்றியை தருவார்கள்.
இந்திரா காந்தி அரசியல் ரீதியாக கடினமான காலத்தை எதிர்கொண்டபோது ஒருங்கிணைந்த ஆந்திராவில் உள்ள மேடக் தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தெலுங்கானா மக்கள் காந்தி குடும்பத்தை நேசிக்கிறார்கள். அதனால் சோனியா காந்தி தெலுங்கானாவில் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.