Tamilசெய்திகள்

பாராளுமன்ற தேர்தலையொட்டி அதிகாரிகள் இடம் மாற்றம்!

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

அதில், தேர்தல் கமிஷன் கூறி இருப்பதாவது:

பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலமும், ஆந்திரா, அருணாசலபிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகள் பதவிக்காலமும் முடிவடைய உள்ளதால், அவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தேர்தல் நடக்கும் மாநிலங்களில், தேர்தல் நடத்தும் பணியில் நேரடி தொடர்புடைய அதிகாரிகள், ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியில் இருக்கக்கூடாது என்ற உறுதியான கொள்கையை தேர்தல் கமிஷன் பின்பற்றி வருகிறது.

அதன்படி, சொந்த மாவட்டத்தில் பணியில் உள்ள அதிகாரிகள், ஒரு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டு காலத்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவர்கள் அல்லது வருகிற மே 31-ந் தேதி அங்கு 3 ஆண்டு பணியை நிறைவு செய்பவர்கள் ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

அதன்படி, அதிகாரிகளை இடமாற்றம் செய்யும்போது, அவர்களை அவர்களது சொந்த மாவட்டத்தில் நியமிக்காமல் அரசு துறைகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதுபோல், மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரும், அதற்கு மேல் உள்ள அதிகாரிகளும் கடந்த 2017-ம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலின்போது பணியாற்றிய இடங்களுக்கு மீண்டும் நியமிக்கப்படக்கூடாது. அங்கு நீடிக்க அனுமதிக்கப்படக்கூடாது.

சில மாவட்டங்களே உள்ள சிறிய மாநிலங்களில், இந்த உத்தரவை அமல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால், தலைமை தேர்தல் அதிகாரி மூலமாக தேர்தல் கமிஷனை அணுக வேண்டும். தேர்தல் கமிஷன் உரிய உத்தரவு பிறப்பிக்கும்.

இந்த உத்தரவு, தேர்தல் பணிக்கென விசேஷமாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு மட்டுமின்றி, தேர்தல் பணியுடன் நேரடி தொடர்புடைய மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர், இணை கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கும் பொருந்தும்.

காவல் துறையில் ஐ.ஜி. முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரை பொருந்தும்.

ஆனால், கம்ப்யூட்டர் தொடர்பான அலுவலக பணிகளை கவனிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட போலீஸ் அதிகாரியை சொந்த மாவட்டத்தில் நியமிக்கக்கூடாது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

தேர்தலின்போது, ஏராளமான அரசு ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்படுவது வழக்கம். அதற்காக பெருமளவு இடமாற்றம் செய்யப்படுவதை தேர்தல் கமிஷன் விரும்பவில்லை. தேர்தல் பணியுடன் நேரடி தொடர்பு இல்லாத டாக்டர், என்ஜினீயர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த இடமாறுதல் கொள்கை பொருந்தாது. இருப்பினும், யாராவது பாரபட்சமாக செயல்படுவதாக புகார் எழுந்தால், அவர்களை இடமாறுதல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிடலாம்.

மண்டல அதிகாரியாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இருப்பினும், அவர்கள் பாரபட்சமின்றி கடமை ஆற்றுகிறார்களா என்பதை தலைமை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வரவேண்டும்.

சம்பந்தப்பட்ட துறையின் மாநில தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

முந்தைய தேர்தல்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு சிபாரிசு செய்யப்பட்ட அதிகாரிகளை தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் நியமிக்கக்கூடாது.

கோர்ட்டில் குற்ற வழக்குகளை சந்தித்து வரும் எந்த அதிகாரியும் தேர்தல் பணியில் நியமிக்கப்படக்கூடாது.

மாற்றப்பட்ட அதிகாரிக்கு பதிலாக, புதிதாக ஒருவரை நியமிக்கும்போது, தலைமை தேர்தல் அதிகாரிகளை கலந்தாலோசனை செய்ய வேண்டும். மாறுதல் உத்தரவின் நகலை அவரிடம் அளிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் உள்ள அதிகாரிகளை இடமாறுதல் செய்வதாக இருந்தால், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகே இடமாற்றம் செய்ய வேண்டும்.

இன்னும் 6 மாதத்துக்குள் ஓய்வு பெறும் அதிகாரிகள், தேர்தல் தொடர்பான பணியில் இருந்தால், அவர்கள் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தேர்தல் பணி எதுவும் வழங்கப்படாது.

பணி நீட்டிப்பு மற்றும் மறுநியமனம் மூலம் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி எதுவும் வழங்கப்படாது.

இந்த உத்தரவுகளை பின்பற்றுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் பணி அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். பொய்யான வாக்குறுதி அளிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த உத்தரவுகளை மாநில அரசுகளின் அனைத்து துறைகளின் கவனத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும். மாற்றப்பட்ட அதிகாரிகள், உடனடியாக பொறுப்பை ஒப்படைத்து செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

இடமாறுதல், நியமனம் ஆகியவற்றை பிப்ரவரி 28-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கைகளை மார்ச் மாதம் முதல் வாரத்துக்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *